பிரபல யூடியூபர் இர்ஃபான் தனது குழந்தையின் தொப்புளை வெட்டிய வீடியோ வைரலாகி சர்ச்சையான நிலையில், மருத்துவம் பார்த்த மருத்துவமனை மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.
பிரபல யூடியூபர் இர்பானுக்கு கடந்த ஜூலை 24ம் தேதி சென்னை தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இந்த நிகழ்வை அவர் கடந்த அக்டோபர் 20ம் தேதி வீடியோவாக வெளியிட்டார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையானது. முன்னதாக அவர் குழந்தையின் பாலினத்தை அறிவித்த நிகழ்வே பெரும் சர்ச்சையான நிலையில் அந்த செயலுக்கு அவர் மன்னிப்பு கோரியதால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், இர்ஃபான் மருத்துவமனையில் குழந்தையின் தொப்புளை வெட்டும் வீடியோவுக்கு பலரது தரப்பில் இருந்தும் கடும் கண்டனம் எழுந்தது. சுகாதாரத்துறை மா.சுப்பிரமணியன் இந்த விவகாரத்தில் இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் அவருக்கு மன்னிப்பு கிடைக்காது என்று காட்டமாக தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து இர்பான் மற்றும் மருத்துவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், மருத்துவம் பார்த்த மருத்துவமனை 10 நாட்கள் செயல்பட தடை விதித்து சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள உத்தரவு ஆனால் புதிதாக பத்து நாட்களுக்கு நோயாளிகளை பார்க்க முடியாது என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.